Print this page

ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை. குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.03.1933 

Rate this item
(0 votes)

ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை அதிகரித்து விட்டதென்றும் இதன் பயனாய் காலித்தனங்களும், பொதுஜன சாவதானத்துக்கு அசௌகரியங்களும் ஏற்பட்டு பல திருட்டு, ரகளை,அடிதடி, ஆபாசப் பேச்சுவார்த்தைகள் முதலியவைகளும் ஏற்படுகின்றன என்று 29-1-33 தேதி "குடி அரசு”ப் பத்திரிகையில் எழுதியிருந்ததுடன் இவற்றைச் சீக்கிரத்தில் ஒழிக்கபோலீசார் தக்க முயற்சிகள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும், விபசாரத் தடுப்பு சட்டத்தின் அமுல் ஈரோட்டிற்கும் கொண்டுவர வேண்டுமென்றும் தெரிவித்துக்கொண்டோம். 

சமீபத்தில் ஈரோடு போலீசு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவர்கள் சிறிது கவலை கொண்டு ஏதோ சில எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகின்றது. ஆனால் காரியத்தில் தக்க மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டதாய் தெரியவில்லை. 

ஆகையால் இப்போதும் பல தோழர்கள் முயற்சி எடுத்து போலீசு சூப்ரண்ட்டெண்ட் அவர்களுக்கு இக்கஷ்டங்களைக் குறித்து விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதாகத் தெரிகின்றது. அதில் தோழர்கள், மு.ச. முத்துக்கருப்பஞ் செட்டியார். ஆர். பழனியப்ப செட்டியார். ஈ. என். குப்புசாமி ஆச்சாரி, எ.கோவிந்தசாமி நாயக்கர், எஸ். வேலுச்சாமி, சுப்பிரமணி யம், ஈஸ்வரன், செலமேலு. நாதன், ரத்தினசபாபதி முதலிய பலர் கையெழுத் திட்டு விண்ணப்பம் செய்துகொண்டதாகத் தெரிகின்றது. 

ஆதலால் இனியாவது உடனே போலீசு இலாக்காதாரர்களும், முனிசி பாலிடியாரும் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். 

முனிசிபல் கவுன்சில் மூலம் ஈரோட்டிற்கு விபசாரத் தடைச் சட்டம் அமுலுக்கு வரவேண்டுமென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி சர்க்காருக்கு அனுப்பவேண்டும் என்றும் விரும்புகின்றோம். 

 

ஈரோட்டில் சற்று ஏறக்குறைய 300 பேர்களுக்குக் குறையாமல் 500க்கு மேற்படாத பெண்கள் பணத்துக்கு விபசாரம் செய்கின்ற கீழ்தர விபசாரிகளாக இருப்பதாக தகவல் எட்டுகின்றது. சில வீதிகளில் மரியாதையான மக்கள் வாழ்வதற்கு யோக்கியதையே இல்லாமல் இருந்து வருகின்றது. ஆகையால் இதை உடனே கவனிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.03.1933

Read 94 times